புதன், 6 மார்ச், 2013

தில்லி மருத்துவ மாணவிக்கு ப் , " பன்னாட்டு வீர மங்கை' விருது




தில்லி மருத்துவ மாணவிக்கு ப் , " பன்னாட்டு வீர மங்கை' விருது

புதுடில்லி: டில்லியில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, உயிரிழந்த மருத்துவ மாணவியின் துணிச்சலை கவுரவிக்கும் வகையில், அவருக்கு, "சர்வதேச வீர மங்கை' விருது வழங்கப் போவதாக, அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
டில்லியில், கடந்த ஆண்டு, ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, வெறிக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம், டில்லி இளைஞர்களிடையே, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கான, தண்டனையை அதிகரிப்பதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ள, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் துணிச்சலை கவுர விக்கும் வகையில், அமெரிக்க அரசு, அவருக்கு, சர்வதேச வீரமங்கை விருதை வழங்கஉள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு, தன்னையே தியாகம் செய்த, இந்திய மாணவியின் துணிச்சல், வியக்கத் தக்கது. அவர், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, போலீசாரிடம், இரண்டு முறை வாக்குமூலம் அளித்தார். அப்போது, "இந்த வழக்கில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும். அதை பார்ப்பதற்காக, நான் உயிரோடு இருக்க வேண்டும்' என, கூறினார். சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த இந்த பெண், பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை நடத்துவதற்கு, பெரும் உத்வேகமாக விளங்கினார். இவருக்கு ஏற்பட்ட பாதிப்பை, இந்திய சமூகம், தனக்கு ஏற்பட்ட பாதிப்பாக கருதி, போராட்டத்தில் இறங்கியது. இந்திய அரசும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
உயிரிழந்த, அந்த மாணவியின் துணிச்சலை கவுரவிக்கும் வகையில், சர்வதேச பெண்கள் தினமான, வரும், 8ம், தேதி, அவருக்கு வீர மங்கை விருது வழங்கப்படவுள்ளது. அவரது குடும்பத்தாரிடம், இந்த விருது வழங்கப்படும். அவருடன் சேர்த்து, மொத்தம், 10 பேருக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி, ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, வெளியுறவு அமைச்சர், ஜான் கெர்ரி ஆகியோர், இந்த விருதை வழங்கவுள்ளனர். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி மாணவியின் சகோதரர் கூறியதாவது: இரண்டு நாட்களுக்கு முன், அமெரிக்க தூதரகத்திலிருந்து, எங்களுக்கு இதுபற்றிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, தூதரக அதிகாரிகள், எங்கள் வீட்டுக்கு வந்து, விருது விஷயத்தை தெரிவித்தனர். விருது வழங்கும் விழாவுக்கு, எங்கள் குடும்பத்திலிருந்து யார் போவது என, இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, டில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, டில்லி ஐகோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் சார்பில், உயிரிழந்த மாணவியின் நண்பர், "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டி அடங்கிய, "சிடி'யை, ஆதாரமாக தாக்கல் செய்தனர். இதற்கு, போலீஸ் தரப்பில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக