வியாழன், 21 மார்ச், 2013

அனைவருக்கும் கல்வி!

அனைவருக்கும் கல்வி!
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குக், கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊராட்சி  த் தலைவர், செல்ல ப் பாண்டியன்:
தேனி மாவட்டத்தில் உள்ள, துரைச்சாமிபுரம் தான், என் சொந்த ஊர். பெண் குழந்தை பிறந்தால், கள்ளிப்பால் ஊற்றி கொல்வது என்ற நிலை மட்டுமே, மாறி உள்ளது. மற்றபடி, எந்த ஒரு சமூக விழிப்புணர்வும் இல்லாத, தாழ்த்தப்பட்ட பிரிவினர் வாழும் பகுதியை சார்ந்தவன். எம்.ஏ., - எம்.பில்., - பி.எட்., வரை படித்து உள்ளேன். எனக்கு கிடைத்த ஊராட்சித் தலைவர் பதவி மூலம், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்தேன். உயர்ஜாதி குழந்தைகள், "மெட்ரிக்கு லேஷன்' பள்ளிக்கு சென்று படித்தனர். ஆனால், பிற்படுத்தப்பட்ட ஏழை விவசாயிகளின் குழந்தைகளோ, கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கூட, தினமும் செல்வதில்லை. வறுமையால், தங்களின் குழந்தைகளையும், விவசாய வேலையில் பெற்றோர் ஈடுபடுத்தியதால், குழந்தைகள் படிப்பில் ஆர்வமின்றி இருந்தனர்.
குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பினால் தான், நன்கு படித்து வாழ்க்கையில் உயர முடியும் என, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். கல்வி திறனை அதிகரிக்க, நானே இலவசமாக மாலையில், "டியூஷன்' எடுத்தேன். குழந்தைகள் வருகையை அதிகரிக்க, அவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்களை பரிசாக அளித்தேன். மாலை பயிற்சி வகுப்புகளில், நன்னெறி கதைகள், யோகா, பொது அறிவு மற்றும் இச்சமூகத்திற்கு தேவையான அனைத்தையும் கற்பிக்கிறேன். தற்போது அனைத்து குழந்தைகளும், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை, தவறின்றி எழுத படிக்க கற்றுள்ளனர். பெற்றோர் ஒத்துழைப்பு தருவதால், குழந்தைகள் தினமும் பள்ளிக்கு செல்கின்றனர். தங்களின் ஏழ்மை நிலை உணர்ந்த குழந்தைகள், "எங்களுக்கு ஆரம்ப கல்வி மட்டும் போதாது, கல்லூரி கல்வியும் படித்தே தீருவோம்' என, முழுமுயற்சியுடன் படிக்கின்றனர். 10 பட்டதாரிகள் மட்டுமே உள்ள எங்கள் கிராமத்தில், இனி அடுத்த தலைமுறையினர் அனைவரும், பட்டதாரிகளாக உருவாகும் காலம், வெகு தொலைவில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக