ஞாயிறு, 31 மார்ச், 2013

கூவமாகும் உயிராறு !









கூவமாகும் சீவநதி!

மாசடைந்துள்ள, வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, ஜோசப் கென்னடி:
தமிழகத்தில் பாயும் ஆறுகளில், வற்றாத ஜீவநதி என்ற பெருமைமிக்கது, தாமிரபரணி ஆறு. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.
தாமிரபரணியில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது, கழிவுகள் தூர்வாரப்படாமை, மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு என, பல காரணங்களால் ஆற்றின் சுவையான தண்ணீர், நஞ்சாக மாறிவிடும் சூழல் வந்துவிட்டது.
தாமிரபரணியின் மொத்த நீளம், 125 கி.மீ., தூரம். வனப்பகுதியின், 50 கி.மீ., பகுதி சுத்தமாகவும், சமவெளியில் உள்ள, 75 கி.மீ., பகுதியும் மாசடைந்ததால், ஆற்றங்கரையிலேயே, "மினரல் வாட்டர்' வாங்கி, தாகம் தீர்க்கும் அவல நிலை உருவாகியுள்ளது. இந்நிலையை மாற்ற, "தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தை' உருவாக்கி செயல்பட்டு வருகிறோம்.எங்கள் இயக்கம் சார்பில், பாபநாசம் கோவில் முன் உள்ள ஆற்று பகுதியில் தூர்வாரிய போது, இரண்டு மணி நேரத்தில், நான்கு லாரியில் அள்ளும் அளவிற்கு, கழிவுகள் தேங்கியிருந்தன. ஆற்றங்கரையே õர மக்களுக்கு, குப்பையை எளிதில் வீசுவதற்கு, தாமிரபரணி ஆறு, குப்பைத் தொட்டியாக இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மூலம், தாமிரபரணியின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வார்த்தைகள் எழுதி, இனி ஆற்றில் குப்பை கொட்டக் கூடாது என, பேரணி நடத்துவது, ஆங்காங்கே தட்டிகள் வைப்பது, இலவசமாக துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டோம்.வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும், பொதுமக்கள், மாணவர்கள் துணையுடன், குப்பை கழிவுகளை நாங்களே நீக்கி, ஆற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபடுகிறோம். ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பது அதிகமானால், இன்னும், 10 ஆண்டுகளில், தாமிரபரணி கூவமாக மாறும் நிலை ஏற்படும்.


கண்ணின் கருவிழி!

சென்னை அரசு கண் மருத்துவமனையின் கண்காணிப்பாளர், மருத்துவர் ராஜரத்தினம்: ஒருவர், முறையாக கண் தானம் செய்ய விண்ணப்பித்திருந்தாலும், அவர் இறந்த பின், குடும்ப உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், கண்ணை தானமாக பெற முடியாது. விண்ணப்பிக்காதவர் இறந்து, குடும்ப உறுப்பினர்கள் விரும்பினால், கண் தானம் செய்யலாம் என்பது, நம் நாட்டின் சட்டம்.இறந்தவரின் கண்களால், இரண்டு நபர்களுக்கு மட்டுமே பார்வை தர முடியும் என்பது, நமக்கு தெரியும். ஆனால், நான்கு நபர்களுக்கு கண் பார்வை தர முடியும் என்பது, புதிய செய்தி. தானமாக பெறப்பட்ட கண்ணை, அப்படியே இன்னொருவருக்கு பொருத்த முடியாது. "கார்னியா' எனும், கண்ணின் கருவிழியை மட்டுமே பொருத்த முடியும். கருவிழியில், "ஸ்டோரோமா' எனும் மேல்பகுதி, "எண்டோதீலியம்' எனும் கீழ்பகுதி என, இரண்டு பகுதிகள் உள்ளன.
கருவிழியின், மேல்பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு மேல் பகுதியும், கீழ்பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழ்பகுதியை பொருத்தினால், ஒருவரிடம் பெறப்படும் இரண்டு கண்கள் மூலம், நான்கு நபர்களுக்கு இந்த முறையில் பார்வை தரலாம். முன்பு ஒரு கருவிழியை, ஒருத்தருக்கு மட்டுமே பொருத்துவது, நடைமுறையாக இருந்தது. இறந்தவரின் கண்கள் தானமாக கிடைப்பது குறைந்ததால், தட்டுப்பாடு ஏற்பட்டதன் விளைவே, இப்புதிய தொழில்நுட்பம்.எச்.ஐ.வி., மஞ்சள் காமாலை, புற்று நோய், நாய்க்கடி போன்ற காரணங்களால் இறந்தவர்களை தவிர, மற்ற அனைவரும், கண்களை தானமாக தரலாம். இறந்தவரின் கண்களை எடுக்க, 10 நிமிடமே போதுமானது. இறந்தவரின் கருவிழி நீரின்றி காய்ந்து போகாதபடி, கண்ணின் மேல், சுத்தமான தண்ணீரில் நனைந்த பஞ்சை வைக்கலாம். ஒருவர் இறந்து, ஆறு மணி நேரத்திலேயே கருவிழியை எடுக்க வேண்டும். எனவே, விரைந்து செயல்படுவது அவசியம். தானமாக பெறப்படும் கண்களை, இரண்டே நாட்களில், மற்றவருக்கு பொருத்தி விடுவோம். அந்த அளவிற்கு, கண்பார்வை இல்லாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக