செவ்வாய், 26 மார்ச், 2013

அழகு முகமே!






அழகு முகமே!

குழந்தைகளுக்கு ஒப்பனை செய்யக் கூடாது என, வலியுறுத்தும் அழகுக்  கலை மருத்துவர், யு.ஆர். தனலட்சுமி:
பெண்கள், ஆண்கள் என, பாலினம் பாராமல் அனைவரும், "மேக்கப்' எனும், ஒப்பனை செய்கின்றனர். "தூங்கும் போதும் மேக்கப்பா?' என, கிண்டல் செய்யும் அளவுக்கு, ஒப்பனை, முக்கியத்துவம் பெற்றுள்ளது.வறண்டு போன முகத்தை பளிச்சிட, ஒப்பனை செய்யலாம். ஆனால், அழகே உருவான குட்டி குழந்தைகளை, இன்னும் அழகுபடுத்துகிறேன் என, விழிப்புணர்வு இல்லாமல், கண்டதை பூசி, பாதிப்பை உருவாக்குகின்றனர். குழந்தைகள் இயற்கையாகவே அழகு என்பதால், செயற்கையை தவிர்ப்பது நல்லது.

தண்ணீரை, தலைக்கு ஊற்றி குளிக்க வைத்தாலே, குழந்தைகளின் உடம்பில் புத்துணர்ச்சி வந்து விடும். தரமான தேங்காய் எண்ணெய் அல்லது பேபி ஆயிலை தேய்த்து, தலை வாரி, நெற்றியில் பொட்டு வைத்தாலே, குழந்தைகள் அழகாக தெரிவர். மேடை நிகழ்ச்சிகள் பங்கெடுக்கும் போது, அதீத ஒப்பனைகளுக்கு பதில், "பளிச்' நிறத்தில், புதிய ஆடைகள் அணிவித்தாலே போதும்.கட்டாயம் ஒப்பனை போட வேண்டுமென்றால், நல்ல நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் சருமம், 15 வயது வரை மென்மையாக இருப்பதால், மிகவும் வீரியமான அல்லது தரமற்ற ஒப்பனையில் உள்ள வேதியல் பொருட்களால், சருமத்தின் இயல்பு தன்மை முற்றிலும் பாதிக்கிறது.

இவர்களுக்கான, சோப்பு, சீப்பு, பவுடர் ஸ்பாஞ்ஜ் போன்றவற்றை, பெரியவர்கள் பயன்படுத்த கூடாது. கண்ணுக்கு, அளவுக்கு அதிகமாக மை வைத்தால், விழிகளில் எரிச்சல் உண்டாகும். முக்கியமாக, "பேஷியல் பிளீச்சிங்' செய்வதை தவிர்க்க வேண்டும்.ஒப்பனை செய்வதை விட, அவற்றை கலைப்பதில் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். பேஷன் ஷோ, நடன அரங்கேற்றத்தின் போது போடப்படும், அழுத்தமான ஒப்பனைகளை கலைக்க, தேங்காய் எண்ணெய் தடவி நீக்க வேண்டும். இல்லாவிட்டால், முகத்தில் கரும் புள்ளி உருவாகி, சருமத்தின் இயல்பு தன்மையும் பாதிக்கப்படும். அழகுக்கு ஆபத்தில்லாமல் அழகு சேர்ப்பதே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக