திங்கள், 11 மார்ச், 2013

தூப்புக்காரி என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்தங்களோட கதை











தூப்புக்காரி என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்தங்களோட கதை



கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 19வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது வெள்ளிக்கோடு கிராமம்.

வெள்ளிக்கோடு கிராமம் முன் எப்போதும் இல்லாத சந்தோஷ சட்டையை அணிந்து கொண்டுள்ளது, காரணம் மண்ணின் மங்கையான மலர்வதி சிறந்த இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகடமி விருதை பெற்றிருப்பதுதான்.

இல்லாமையையும், இயலாமையையும் தாண்டி ஒரு பெண் சாதிக்கமுடியும் என்பதற்கு சான்றாக விளங்குபவர்தான் மலர்வதி.

தூப்புக்காரி என்ற இவரது நாவலுக்குதான் விருது கிடைத்துள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் 22ம்தேதி நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெறுவதை தனது வாழ்வின் பாக்கியமாக கருதினாலும் அதற்கான பயணச் செலவு குறித்து தயங்கியும், மயங்கியும் நிற்கிறார்.
மனிதநேயத்தை எழுத்திலும், எண்ணத்திலும் நிறையவே கொண்டுள்ள நாகர்கோவில் தினமலர் நிருபர் மணிகண்டன், மலர்வதியை நேரடியாக பார்த்து அவரது நிலமை பற்றி உருக்கமாக ஒரு செய்தி போட்டு இருந்தார்.

இது பற்றி அவரிடம் மேலும் பேசியபோது கிடைத்த விஷயங்கள்தான் மலர்வதியின் "இமேஜை' பலமடங்கு உயர்த்தியது.
ஆங்கில கலப்பு இன்றி நாகர்கோவில் வட்டார தமிழில் நிறுத்தி நிதானமாக பேசுகிறார் மலர்வதி.

அவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது, "நான் எனது அலுவலகத்தில் வேலையில் இருக்கிறேன், என் சொந்த விஷயங்களை அலுவலக நேரத்தில் பேச விருப்பப்படவில்லை, வீட்டிற்கு போனதும் பேசட்ட 'என்றார்.
இரவு 8 மணிபோல நினைவூட்டுவதற்காக திரும்ப அலைபேசியில் அழைத்த போது, "இப்போதுதான் அமைதி கிடைத்தது, நான் உங்களை கூப்பிடட்ட' என்று பணிவாக கேட்கிறார், அதாவது தனது வேலைக்காக அடுத்தவருக்கு சிரமம் மட்டுமல்ல, செலவும் வைக்ககூடாது என்ற மென்மையான எண்ணத்தின் எதிரொலி அது.

அவரிடம் பேசியதன் சராம்சமாவது...
தூப்புக்காரி என்றால் நாகர்கோவில் பகுதியில் துப்புரவு பணியாளர் என்று பொருள்.தூப்புக்காரி கதை என் சொந்தக்கதை மட்டுமல்ல என் சொந்தங்களின் கதை. திடீரென என் அப்பா திடீர்னு குடும்பத்தைவிட்டுவிட்டு போன போது என் அம்மா விக்கித்துப்போய்விட்டார். அண்ணன்,அக்கா,நான் ஆகிய மூவருக்கும் அப்போது சிறு பிராயம். எந்த கவலையையும் விட பசியால் அழுத தன் பிள்ளைகளின் கவலைதான் என் அம்மாவிற்கு பெரிதாக தெரிந்தது, தனக்கு தெரிந்த ஒரே வேலை கூட்டிப் பெருக்குவதுதான். நாள் கூலி அடிப்படையில் ஒரு பள்ளியை சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது.

கூட்டிப்பெருக்குவதுடன் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடைத்துக் கொள்ளும் சாக்கடையை குத்திவிடும்போதும், வீசியெறிந்த மலத்தை அள்ளும்போதும், தீட்டுத்துணிகளை அருவருப்பின்றி அகற்றும்போது நான் அம்மாவின் இடுப்பில்தான் இருந்தேன், வளர்ந்தேன்.
வேலை அதிகமாகும் போது அங்குள்ள மொட்டப்பாறைகளில் கிடத்தப்பட்டிருப்பேன், எல்லா வேலையும் முடிந்து அம்மா வந்து அள்ளி அணைக்கும் அந்த ஒரு கணத்திற்காக காத்திருந்தேன்.

மலத்தை பார்த்தாலே முகம் சுளித்து ஓடும் மனிதர்கள் மத்தியில் மலக்கூட்டத்திற்கு மத்தியில் உணவு சாப்பிடும் ஆயிரக்கணக்கான விளிம்பு நிலை மனுஷிகளில் ஒருவராகத்தான் என் அம்மா இருந்தார்.
தன்னை அசுத்தப்படுத்திக்கொண்டு தன் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொண்ட அம்மாவைப் போன்ற பெண்களுக்கான சமர்ப்பணம்தான் இந்த நாவல்.

வீட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாக ஒன்பதாவது வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு போய் படிக்கமுடியவில்லை, ஆனால் இயற்கையை நேசிப்பதும், மனிதர்களை வாசிப்பதும் எனக்கு பிடித்த விஷயமாகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் வாசித்த மனிதர்களைப்பற்றி, எனக்கு கிடைத்த அனுபவத்தை, நான்பட்ட வலியை எழுத்து மூலம் பகிர்ந்துகொள்வதற்கான பதிவுதான் தூப்புக்காரி.

இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எண்ணற்ற பெண்கள் மதிக்கப்பட வேண்டும் இந்த கழிப்பறை வேலைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்ற என் ஆதங்கத்துடன் நாவலை முடித்திருப்பேன்.
நாகர்கோயில் அனல் பதிப்பகத்தில் கடன் சொல்லித்தான் இந்த நாவலை அச்சேற்றினேன், நாவலை படித்த சில மூத்த படைப்பாளிகள் இதனை சாகித்ய அகடமி விருதிற்கு அனுப்பச் சொன்னதன் பேரில் அனுப்பியதில் 2012ம் ஆண்டிற்கான இளம் சாகித்ய அகடமி விருது எனக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. தாமிர பட்டயமும், 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். பணம், தாமிர பட்டயம்தாண்டி எனக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு பெரிதாக தோன்றுகிறது.

இப்போது நான் இந்தப்பகுதியில் வரும் "முதற்சங்கு'என்ற மாத இதழிற்கும்,"இலக்கிய சிறகு' என்ற நாளிதழுக்கும் பொறுப்பாசிரியராக உள்ளேன். குறைந்த வருமானம் என்றாலும் நிறைவான பணி. இப்போது கிடைத்துள்ள விருது என்னை மேலும், மேலும் நிறைய எழுத தூண்டியுள்ளது.
விருது பெறும் நாள் என் வாழ்நாளில் முக்கியமான நாளாகும், நண்பர்கள் நல்லமனம் படைத்தவர்கள் உதவியுடன் போய்வருகிறேன், வாழ்த்துங்கள். மலர்வதி தொடர்பு எண்:9791700646.
- எல்.முருகராசு










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக