புதன், 27 மார்ச், 2013

இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும் : தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும் : தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கையை நட்பு நாடு என்று இந்தியா சொல்வதை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இலங்கைக்கு எதிராக தமிழக முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்தில், இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற, ஈவுஇரக்கமற்ற, மனிதநேயமற்ற செயல்களை, போர்க் குற்றங்களை, இனப் படுகொலையைக் கண்டித்து, கல்லூரி மாணவ-மாணவியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுதான் இந்தப் போராட்டம். அரசியலுக்கு சிறிதும் இடமளிக்காமல் இலங்கை தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, உன்னதமான குறிக்கோளுக்காக அறவழியில் நடத்தப்படும் இந்தப் போராட்டம் இலங்கைத் தமிழர் நலனுக்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடு.
இவ்வளவு உணர்வுப்பூர்வமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும், இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகிறது.
போரினால் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் அவல நிலைமை நீடிக்கிறது. இது மட்டுமல்லாமல், தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்களை இலங்கை அரசு குடியமர்த்தி வருகிறது. தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் ஒரு இனவெறி இலங்கையில் தாண்டவமாடிக் கொண்டு இருக்கிறது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழர்களின் உணர்வுகளுக்கு, தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் கீழ்க்காணும் தீர்மானத்தினை தமிழக அரசின் சார்பில் நான் முன்மொழிகிறேன்.
தீர்மானம் :
“தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எசமானனாக இல்லாமல் – உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை” என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு,
இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்;
இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்;
இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”
பேரவைத் தலைவர் அவர்களே, என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் முதல்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக