புதன், 6 மார்ச், 2013

பெயரோ அரசன்கொடை தொடரும் தூக்குப்' பயணம்

தாண்டிக்குடி: திண்டுக்கல், தாண்டிக்குடி மலைப்பகுதி அரசன்கொடைக்கு, ரோடு அமைக்கும் திட்டம், வனத்துறையின் அனுமதிக்காக, 16 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மலை கிராமத்தில், நோயாளிகளை, "டோலி' கட்டி தூக்கி வரும் அவலம் நீடிக்கிறது.தாண்டிக்குடி அருகே வடகவுஞ்சி ஊராட்சியை சேர்ந்தது அரசன்கொடை. இங்கு எலுமிச்சை, மலை வாழை, காபி, அவக்கடா, ஆரஞ்சு உள்ளிட்டவை விளைகின்றன. கதவுமலைநாதன் சிவன் குகைக்கோவில் இங்கு உள்ளது.இந்த கிராமத்திற்கு ரோடு வசதியில்லை; தாண்டிக்குடி-அரசன்கொடை இடையே வனப்பகுதியில், 7 கி.மீ., ஒத்தையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அத்தியாவசிய தேவை, மருத்துவ வசதிக்கு, தாண்டிக்குடிக்கு வரவேண்டும். விளைப்பொருட்களை குதிரைகள் மூலம் கொண்டு வருகின்றனர். உடல் நலம் இல்லாதவர்களை, "டோலி' கட்டி தூக்கி வரும் அவலம் நீடிக்கிறது. கடந்த, 16 ஆண்டுகளாக, ரோடு வசதிக்காக கிராமத்தினர் போராடியும், அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர்.இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது:வைகுண்டம்: இப்பகுதியில், 60 ஆண்டுகளாக வசிக்கிறோம். தொடர்ந்து, 16 ஆண்டுகளாக, ரோடு வசதிக்காக, அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்தும் பலன் இல்லை. வனத்துறை நிலம் போக எஞ்சியுள்ள இடத்தில், ஊராட்சி ஒன்றியம் மூலம் ரோடு அமைக்க திட்டம் வகுத்துள்ளனர். அரசு மனது வைத்தால், எங்கள் கிராமத்திற்கு விடியல் பிறக்கும்.தங்கத்துரை: ரோடு வசதி ஏற்படுத்தினால், அருகிலுள்ள பெரும்பள்ளம், கருவேலம்பட்டி, பட்டியக்காடு, செம்பிரான்குளம் மலை கிராமங்களும் பயன்பெறும்.முருகம்மாள்: நடந்தே எங்களது கால்கள் ஓய்ந்து விட்டன. ரோடு அமையும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. அரசு மனது வைக்க வேண்டும்.மாவட்ட வன அலுவலர் சம்பத் கூறுகையில், ""தாண்டிக்குடி-அரசன்கொடை பாதைக்கான ஆவணங்களை பரிசீலித்து வருகிறோம். சாத்தியகூறு இருந்தால், ரோடு அமைக்க அரசுக்கு பரிந்துரைப்போம்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக