ஞாயிறு, 24 மார்ச், 2013

இலங்கைச் சிக்கல் : மத்திய அரசு மீது நாஞ்சில் சம்பத்து தாக்கு

இலங்கைச் சிக்கல் : மத்திய அரசு மீது நாஞ்சில் சம்பத்து தாக்கு
இலங்கை பிரச்சினை: மத்திய அரசு மீது நாஞ்சில் சம்பத் தாக்கு
மதுரை, மார்ச். 24-

மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரவை மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். தெற்கு 1-ம் பகுதி செயலாளர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றினார். நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

அகிலமே வியக்கும் வகையில் தமிழகத்தில் அம்மா வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி நடத்தி வருகிறார். ஏழை-எளிய மக்களை காக்கும் அன்னபூரணியாக திகழ்ந்து வருகிறார். வரி இல்லாத பட்ஜெட் தந்து மத்திய அரசு நம்மை வஞ்சித்தாலும் அம்மா தமிழகத்தை தாயை போல பராமரித்து வழிநடத்தி வருகிறார்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகத்துக்கு துணையாக நின்றபோது அம்மா துணிச்சலுடன் போராடி மத்திய அரசிதழில் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை வெளியிட செய்து வாழ்நாள் சாதனை படைத்தார். தமிழக விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தார் அம்மா.

இலங்கை தமிழர்களுக்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் அம்மா. ஒரு நாட்டின் அதிபரை போர்க் குற்றளாவியாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த துணிச்சல்மிக்க ஒரே தலைவர் அம்மா தான்.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் போர் நடத்தியது தமிழகத்தில் முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதி தமிழ் இனத்துக்கு விரோதமாக செயல்பட்டார். இலங்கைக்கு போரை நடத்த ஆயுதங்களையும், ராணுவ ரேடார்களையும் மத்திய காங்கிரஸ் அரசு வழங்கியபோது கருணாநிதி எதிர்க்கவில்லை. தட்டி கேட்கவில்லை. கருணாநிதி இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்டது என்று அறிவித்த நிலையில் இலங்கையில் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்த அப்பாவி தமிழ் இனம் கொத்து குண்டுகள் மூலம் அழிக்கப்பட்டன. இதற்கு கருணாநிதி தான் பொறுப்பேற்க வேண்டும். இப்போது டெசோ என்று சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இலங்கை தமிழருக்காக துரும்பு கூட எடுத்து போடாத கருணாநிதி இப்போது பதவி சுகத்தை அனுபவித்து விட்டு ஆதரவை வாபஸ் பெற்று விட்டதாக கூறுகிறார். ஏன் இந்த நாடகம். விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து விடும் என்று தெரிந்து கொண்டு கருணாநிதி காங்கிரஸ் அரசை எதிர்ப்பது போல நாடகம் ஆடுகிறார்.

காங்கிரஸ் காரனை பற்றி கருணாநிதிக்கு தெரியாதா? ஆதரவை திரும்ப பெற்ற மனுநாளே சி.பி.ஐ. ஸ்டாலின் வீட்டுக்கு வருகிறது. வெளிநாட்டு கார் வாங்கியதில் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு என்று சி.பி.ஐ. சொல்கிறது. இப்படி நாட்டை ஏமாற்றும் ஒரு குடும்பத்தை தமிழக மக்கள் அடையாளம் கண்டு விட்டனர். இனி கருணாநிதி மக்களை ஏமாற்ற முடியாது. மந்திரியாக இருந்த மு.க.அழகிரி பாராளுமன்றத்தில் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை.

கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால் காரில் தொடங்கி கைவிலங்கு வரை காங்கிரஸ் கொண்டு போகாமல் விடாது. காங்கிரஸ் காரனை பற்றி கருணாநிதிக்கு சரியாக தெரியவில்லை என்று நினைக்கிறேன். கேரள கடற்பகுதியில் 2 கேரள மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி வீரர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புவதில் கேரள முதல்-அமைச்சர், கேரளாவை சேர்ந்த ராணுவ அமைச்சர் எடுத்த நடவடிக்கையால் பிரதமர் மன்மோகன்சிங் இத்தாலியை மிரட்டினார். இத்தாலி அடிபணிந்து குற்றவாளிகளை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க சம்மதித்தது. அப்படி இலங்கை தமிழர் பிரச்சினையில் கருணாநிதி செயல்பட்டு இருந்தால் 2009-ம் ஆண்டு இலங்கையில் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கும். ஆனால் அதனை செய்ய கருணாநிதி தவறிவிட்டார்.

எனவே உலக தமிழர்கள் மத்தியில் அம்மாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதனை கருணாநிதியால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இத்தாலி மீது காட்டும் ஆத்திரத்தை இலங்கை மீது ஏன்? காங்கிரஸ் அரசு காட்டவில்லை. ஏனென்றால் இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதற்கு ஆயுதம் கொடுத்தது டெல்லி.

போர் விமானம், ரேடார் கருவிகள் கொடுத்து போரை நடத்தியதே டெல்லிதான். அதனால்தான் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்துபோக மத்திய அரசு உடந்தையாக இருந்தது. இந்த நிலையில் தான் இனி தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஈடுபடாது. மாணவர்கள் கோபம் அடைந்துவிட்டனர். போராட்டங்கள் தீவிரமாகி விட்டன என்று உணர்ந்த கருணாநிதி மத்திய அரசில் இருந்து விலகிவிட்டார். 4 ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு கடைசி நேரத்தில் ராஜினாமா செய்வதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் முடிவு செய்துவிட்டனர். அடுத்த பிரதமராக அம்மா தான் வரவேண்டும் என்று தீர்மானித்து விட்டனர். அது நடந்தே தீரும்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக