வியாழன், 14 மார்ச், 2013

அரசு பணியாளர் தேர்வு ப் பாடத்திட்டம் மாற்றம்: தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் - கருணாநிதி அறிக்கை

அரசு பணியாளர் தேர்வு ப் பாடத்திட்டம் மாற்றம்: தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் - கருணாநிதி அறிக்கை
அரசு பணியாளர் தேர்வு பாடத்திட்டம் மாற்றம்: தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் - கருணாநிதி அறிக்கை
சென்னை, மார்ச். 14-

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசுப் பணிகளுக்காக தேர்வுகளை எழுதும் தமிழக மாணவர்கள் மீது தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பாடத் திட்டங்களில் மாறுதல்களை அறிவித்துள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத் திட்டத்திலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருக்கிறது. குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வில், பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளில், தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இந்த மாறுதல்கள் குறித்து, 'புதிய மாற்றங்களின்படி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் தமிழ் மொழியிலிருந்து இனி கேள்விகள் அதிகம் இடம் பெறாது. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

பொது அறிவு மற்றும் பிற பகுதிகளில் கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், அதைத் தமிழ் மொழிப் பகுதியில் கேட்கப்படும் எளிதான கேள்விகளால் அதிக மதிப்பெண் எடுத்து ஈடு செய்ய முடியும் என்று ஏற்கனவே இருந்த நிலை தற்போது செய்யப்படும் மாற்றங்களால் பறி போய் விடும்' என்று 'தேர்வர்கள்' கருத்து தெரிவித்துள்ளனர்.

'தேர்வர்கள்' தெரிவித்துள்ள இந்தக் கருத்து முற்றிலும் ஏற்கத்தக்கது. தமிழ் மொழி மூலம் கல்வி கற்று தேர்வெழுதும் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மாற்றங்கள் எதிரானதாக உள்ளன என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மாற்றங்கள் அவர் எழுதியிருக்கும் கடிதத்திற்கு முரணாகவே அமைந்திருக்கின்றன.

எனவே உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு தமிழ் மொழிக்கும், தமிழ் மாணவர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்போ, பின்னடைவோ ஏற்படா வண்ணம், அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்துள்ள பாடத்திட்ட மாற்றங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக