சனி, 9 மார்ச், 2013

வேலைஉறுதி!



வேலை நிச்சயம்!

இரண்டாயிரம் ஏழை இளைஞர்களுக்கு, இலவசமாக தொழில் பயிற்சியளித்து வேலை வாங்கி தந்த, ரமேஷ் சுவாமி:

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள இளைஞர்களை மேம்படுத்த, "உன்னதி' எனும் தொண்டு நிறுவனத்தை, 2003ல், பெங்களூரில் ஆரம்பித்தோம். இத்தொண்டு நிறுவனம், "ஸ்ரீ குருவாயூரப்பன் பஜன் சமாஜ் டிரஸ்ட்'டின் ஒரு அங்கமாக செயல்படுகிறது. தற்போது இதன் அறங்காவலராக, நான் செயல்படுகிறேன்.

இந்தியாவில், இன்றைய பொருளாதார சூழ்நிலையால், பத்தாம் வகுப்பு கூட படிக்க முடியாமல், பல இளைஞர்கள் உள்ளனர். முறையான கல்வி அறிவோ, பயிற்சியோ, வழிகாட்டுதலோ இல்லாமல் வேலை செய்வதால், இளைஞர்களின் திறன் வீணடிக்கப்படுகிறது.

இளைஞர்களின் திறனை அதிகரிக்க, முறையாக பயிற்சியளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்த, இலவச தொழில் பயிற்சி மையத்தை, பெங்களூரில் அமைத்தோம். இன்று, சென்னை, மும்பை, டில்லி, மைசூர், நாக்பூர், இந்தோர், தார்வாட், அகமதாபாத், சிர்சி, புனா என, இந்தியா முழுவதும் பயிற்சி மையங்கள் விரிவடைந்துள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு, தினமும் காலை, 8:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, மொத்தம், 70 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் கணினி, ஆளுமைத் திறன், ஆங்கிலம், நல்லொழுக்கம், பெரிய வணிக வளாகங்களில், வாடிக்கையாளர்களுக்கு எப்படி சேவை செய்வது, அலுவலக உதவியாளர், வாகனம் ஓட்டுதல், கணினியில் டேட்டா என்ட்ரி, செக்யூரிட்டி சர்வீசஸ், அழகு கலை, நட்சத்திர ஓட்டல்களில் விருந்தோம்பல் என, பல வகையான பயிற்சி வகுப்புகளை, இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தருகிறோம்.

இந்தியாவில், இன்று நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால், எங்களிடம் பயிற்சி பெற்ற ஏழை இளைஞர்களுக்கு, துவக்கத்திலேயே குறைந்தபட்சம், 6,000 ரூபாய் சம்பளத்திலிருந்து, நாங்களே வேலை வாங்கி தருகிறோம். இதுவரை, 2,000 ஏழை இளைஞர்களுக்கு, இலவச பயிற்சி அளித்து, வேலையும் வாங்கி தந்துள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக