ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

"அம்மா " திட்டம் அறிமுகம்





சென்னை: வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் அலைவதை குறைக்கும் வகையில், மக்கள் வசிக்கும் இடத்திற்கே, வருவாய்த் துறையினர் சென்று பணியாற்றும், "அம்மா' திட்டம், இன்று தமிழகத்தில் துவக்கப்படுகிறது.

முதியோர், விதவை பென்ஷன் பெறுவோர், பட்டா மாறுதல் வேண்டுவோர், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்று என, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய, தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் அணுக வேண்டி உள்ளது. எல்லா தாலுகா அலுவலகங்களிலும் தினமும், பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காணலாம்.

அங்குள்ள, வருவாய்த் துறை அதிகாரிகளிடம், விண்ணப்பங்களை அளித்தால், விண்ணப்பம் மீண்டும், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் என, அதிகாரிகளுக்கு சென்று, அவர்கள் பரிசீலித்து, ஆய்வு செய்து, சான்று, பட்டா உள்ளிட்டவற்றை, வழங்க பரிந்துரைப்பர்.இதற்கு, நாள் கணக்கில் அலைய வேண்டியுள்ளது. அதிக அளவு லஞ்சம், ஊழலும் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில், வருவாய்த் துறை சார்பில், கிராமந்தோறும், வருவாய்த் துறை அதிகாரிகளே நேரடியாகச் சென்று, மக்களின் குறைகளைத் தீர்க்கும் புது திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் வாழும், கடை கோடி மக்களுக்கும் மிகையான சேவையை உறுதிப்படுத்துதல் - "அம்மா
திட்டம்' என, இந்த திட்டத்திற்கு பெயர் சூட்டப் பட்டுள் ளது.

இத்திட்டத்தை, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வின்னப்பள்ளி கிராமத்தில், வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், இன்று துவக்கி வைக்கிறார். வயதானோர், ஏழைகள், பணம், நேரம் செலவழித்து, தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று, காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி, வாரத்தில் ஒரு நாள், ஒரு ஊராட்சியில், வருவாய்த் துறை சார்பில், அதிகாரிகள் சென்று முகாமிடுவர். அங்கு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை, ஊராட்சியிலேயே ஆய்வு செய்து, அங்கேயே உடனடியாக வழங்கப்படும்.

இது தவிர, குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னை, நிலம் சம்பந்தமான பிரச்னைகளை நேரில் ஆய்வு செய்து, தீர்வு காணப்படுகிறது. இதுகுறித்துவருவாய்த்துறை செயலர் ராஜிவ் ரஞ்சன்
கூறுகையில், ""இதன் மூலம், வருவாய்த் துறையின் சேவை துரிதப்படுத்தப்படும்,'' என்றார்.
இது தவிர, கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில், பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம், திங்கள் கிழமையில் நடத்தப்படுகிறது. இதிலும், பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.

மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமத்தில், மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை, "மக்கள் தொடர்பு முகாம்' நடத்தப்படுகிறது. இதில், கலெக்டர் தலைமையில், அந்த கிராமத்திற்கு அதிகாரிகள் சென்று, பொதுமக்கள் குறைகளைக் கேட்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக