வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

திருமண விழாவில் செயலலிதா சொன்ன குட்டிக்கதைகள்

திருமண விழாவில் செயலலிதா சொன்ன குட்டிக்கதைகள்
திருமண விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதைகள்
சென்னை, பிப். 15-
65 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசுகையில் இரு குட்டிக்கதைகள் கூறினார். அவர் பேசியதாவது:-
பழிப்புக்கு இடமில்லாத வாழ்க்கையை இல்லறம் என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட இல்வாழ்க்கை அமைய வேண்டும் என்றால், அன்பும், அறமும், அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. அப்பொழுது தான் வாழ்க்கை இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும்.
ஓர் ஏழைச் சிறுவன் வீடு வீடாக சென்று துணிகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் அவனுக்கு கடும் பசி. அவன் கையில் ஐம்பது காசு மட்டுமே இருந்தது. இந்தக் காசை வைத்து எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.
“யார்?” என்று கேட்டவாறே, ஒரு இளம்பெண் கதவைத் திறந்து அந்தச் சிறுவனைப் பார்த்து “என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.
அந்தப் பெண்ணிடம் சாப்பாடு கேட்க மனமில்லாத அந்தச் சிறுவன், “குடிக்க தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.
அந்தச் சிறுவனை ஏற, இறங்கப் பார்த்த அந்தப் பெண், அவன் கடும் பசியில் இருப்பதை உணர்ந்தாள். பின்னர், ஒரு டம்ளர் பாலை கொண்டு வந்து அந்தச் சிறுவனிடம் கொடுத்தாள்.
அந்தப் பாலை குடித்து முடித்த சிறுவன், “நான் எவ்வளவு காசு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.
அதற்கு அந்தப் பெண், “நீ எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு ஒரு பொருளை அன்பாகக் கொடுக்கும் போது காசு வாங்கக் கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்” என்று கனிவுடன் கூறினாள்.
அதற்கு அந்தச் சிறுவன், “என் அடி மனதிலிருந்து தங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினான்.
அழகாக இருந்த அந்த இளம்பெண் திடீரென நோய்வாய்பட்டாள். அந்த ஊரில் அவளுக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண்ணை அனுமதித்தனர். புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் வரவழைக்கப்பட்டார்.
அந்த மருத்துவர், அந்தப் பெண்ணின் விவரங்களையும் அந்தப் பெண்ணுக்கு வந்துள்ள நோயினையும் படித்து தெரிந்து கொண்டார். உடனடியாக தன்னுடைய அறைக்குச் சென்று விட்டார். அந்தப் பெண்ணுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண் குணமடைந்தாள். மருத்துவ சிகிச்சைக்கான பில்லை கொண்டு வரும்படி மருத்துவமனையின் கணக்கரிடம் மருத்துவர் தெரிவித்தார். அவ்வாறே பில்லும் வந்தது. அந்த பில்லில் எதையோ எழுதி, பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பிவிட்டார் மருத்துவர்.
அந்த பில்லின் உறையைப் பார்த்ததுமே அந்தப் பெண்ணுக்கு நடுக்கம் வந்துவிட்டது. மருத்துவச் செலவு எவ்வளவு இருக்குமோ என்ற பயத்துடன் உரையை பிரித்தாள் அந்தப் பெண்.
அந்த பில்லில், “ஒரு டம்ளர் பாலுக்கு ஈடாக இந்தப் பில்லுக்கு முழுக் கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது” என்று எழுதப்பட்டிருந்தது. இது வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு ஆகும்.
இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது, அன்பின் சக்தியை, அன்பின் வலிமையை என்பதை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பினை, மணமக்களாகிய நீங்கள் உங்கள் மனைவியிடம், உங்கள் கணவரிடம், உங்கள் பெற்றோர்களிடம், உங்கள் உற்றார் உறவினர்களிடம் செலுத்தினால், உங்கள் வாழ்வில் நிச்சயம் அமைதியும், ஆனந்தமும் நிலவும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மட்டுமல்ல. எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நாம் செய்கிற நல்ல காரியம், என்றாவது ஒரு நாள் நமக்கு நன்மையைத் தரும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல், அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்.
அன்பு செலுத்துவதால், துன்பம் வராது என்று சொல்ல முடியாது. இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் அந்த துன்பங்களை எதிர்கொள்ளக் கூடிய, மன வலிமை; சவால்களை சமாளிக்கக் கூடிய மன உறுதி உங்களிடம் இருக்க வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
ஜெயலலிதா சொன்ன மற்றொரு குட்டிக்கதை வருமாறு:-
“மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்“ என்றார் மகாகவி பாரதி.
மன உறுதி உடையவர்களால் தான் நினைத்ததை நினைத்தபடி அடைய முடிகிறது. மன உறுதியுடையவர்கள் துன்பத்தில் துவள்வதில்லை; மன உறுதி உடையவர்களால் தான் பிறருக்கு உதவ முடிகிறது. மன உறுதி இல்லாதவர்களை உலகம் ஒதுக்கி விடுகிறது. இதனை மனதில் பதிய வைத்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் மேற்கொண்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
மன உறுதி என்றவுடன், எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.
அமெரிக்காவில், ஒரு தேவாலயத்தில், பாதிரியார் ஒருவர் அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி, நீண்ட உரையாற்றினார். அந்த உரை முடிந்தவுடன், “யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அனைவரும் கையை உயர்த்தினர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் உயர்த்தவில்லை.
உடனே அந்தப் பாதிரியார், அந்தச் சிறுவனிடம், “நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? உனக்கு நரகம் செல்லத் தான் விருப்பமா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன், “நான் சொர்க்கத்தையும் விரும்பவில்லை, நரகத்தையும் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன்” என்றான்.
உடனே அந்தப் பாதிரியார், அந்தச் சிறுவனைப் பார்த்து, “இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுவன், “இங்கே கருப்பு இன மக்களை நாயை விட கொடுமையாக நடத்துகின்றனர். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதியானால் தான் முடியும்“ என்று அமைதியாக கூறினான்.
அந்தச் சிறுவன் தான், பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கன்.
சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கன் அவர்களைப் போன்று, நீங்கள் மன உறுதியுடன், ஒரு குறிக்கோளுடன் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
“வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும்” என்பது போல், தனி மனிதன் உயர்ந்தால், வீடு உயரும்; வீடு உயர்ந்தால், ஊர் உயரும்; ஊர் உயர்ந்தால், தமிழ்நாடு உயரும்; தமிழ்நாடு உயர்ந்தால், பாரத தேசம் உயரும் என்பதை மனதில் வைத்து, இல்லற வாழ்க்கையில் இன்று அடியெடுத்து வைத்துள்ள மணமக்களாகிய நீங்கள் அன்புடனும், அதே சமயத்தில் குறிக்கோளுடனும் செயல்பட வேண்டும். அந்தக் குறிக்கோள் உங்கள் இல்லத்துடன் நிற்காமல், மாநிலம் முழுவதும் விரிந்து பரவ வேண்டும்.
தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கவும்; காவேரி டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறாமல் செழிப்புடன் இருக்கவும்; தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும்; நான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமென்றால், மத்தியில் நமது குரல், தமிழர்களின் வலுவான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கக் கூடிய, நாம் சொன்னால் கேட்கக்கூடிய, மத்திய அரசை உருவாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், “நாளை நமதே நாற்பதும் நமதே” என்ற இலக்கினை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன், வருகின்ற மக்களவைத் தேர்தலில் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக்கொண்டு,
கலையாத கல்வி, குறையாத வயது, கபடில்லா நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, பிணியில்லா உடல், சலிப்பில்லா மனம், அன்பான வாழ்க்கைத் துணை, தவறாத மக்கட்பேறு, குறையாத புகழ், வார்த்தை தவறாத நேர்மை, தடைகள் வாரா கொடை, தொலையாத செல்வம், கோணாத கோல், துன்பம் இல்லாத வாழ்க்கை, இறைவனின் அருள் ஆகிய பதினாறு செல்வங்களையும் பெற்று; அன்பினால் அரவணைத்துப், பண்பினால் பரவசப்படுத்தி, மன உறுதியுடன் சவால்களை எதிர்கொண்டு, இணை பிரியாமல் இன்பம் எய்தி, பெற்றோர், சுற்றத்தார் நலம் காத்து, பல்லாண்டு வாழ்க! வாழ்க! என மனதார வாழ்த்தி விடை பெறுகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக