ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

இளங்குமரனாரின் திருவள்ளுவர் தவச்சாலை

இந்த வாரம் கலாரசிகன்






 திருச்சிக்கு ச் சற்று வெளியே கரூர் செல்லும் பாதையில் அல்லூர் என்கிற கிராமம். "திருவள்ளுவர் தவச்சாலை' என்கிற பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு, எந்தத் தமிழ் ஆர்வலருக்குத்தான் உள்ளே போய்ப் பார்க்காமல் இருக்கத் தோன்றும்?
எண்பதைத் தாண்டிய வயதிலும் இருபது வயது இளைஞரின் துடிப்புடன் தமிழ்ப் பணியாற்றிவரும் இளங்குமரனார் அந்தத் தவச்சாலையில்தான் தமிழ்த் தவம் நோற்று வருகிறார். உள்ளே நுழைந்ததும், கண்களைக் கவர்வது அவர் நிறுவியிருக்கும் வள்ளுவர் ஆலயம். இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து, திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவி ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகிவிட்டன.
ஏதோ பர்ணசாலை போட்டுக் கொண்டு இளங்குமரனார் தவம் செய்வதாக நினைத்துவிடக் கூடாது. திருவள்ளுவருக்குக் கோயில் கட்டியதுடன் நின்றுவிடாமல் ஓர் அரிய நூலகத்தையும் நிறுவியிருக்கிறார். ஏறத்தாழ 60 ஆண்டுகளாக அவர் சேர்த்து வைத்திருக்கும் கிடைத்தற்கரிய புத்தகங்கள் அந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அந்தத் தவச்சாலையில் விருந்தினர் தங்குவதற்கு இரண்டு அறைகள் வேறு கட்டி வைத்திருக்கிறார்.
""ஆய்வு மாணவர்கள் யாராவது வந்தால் இங்கேயே தங்கி, எனது நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு ஏதாவது ஐயப்பாடு ஏற்பட்டால் விளக்கம் சொல்லிக் கொடுக்கிறேன்'' என்று கூறும் இளங்குமரனாரின் பணி மேலும் தொடர்கிறது. கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழ்முறைத் திருமணங்கள் நடத்தி வைக்கத் தொடங்கி, இதுவரையில் ஏறத்தாழ 4000 திருமணங்கள் நடத்தி வைத்திருக்கிறார். காதணிவிழா, புதுமனைப் புகுவிழா, மணிவிழா என அனைத்து விழாக்களையும் தமிழில் நடத்தி வரும் இளங்குமரனார் இது பற்றி ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டிருக்கிறார்.
தான் கற்றது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் என்கிற சீரிய நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இளங்குமரனார், தேவநேயப்பாவாணரின் மாணாக்கர். அவரைப் பற்றி "தேவநேயம்' என்கிற தொகுப்பையே வெளியிட்டிருக்கிறார். இவரது நூலகத்தில், பல்வேறு அறிஞர்களின் கிடைத்தற்கரிய புத்தகங்கள், புகைப்படங்கள், கடிதங்கள் போன்றவற்றையும் சேகரித்து வைத்திருக்கிறார்.
தமிழ்த் தவம் புரிந்துவரும் இளங்குமரனாரின் ஆதங்கம் எல்லாம், நாம் தமிழ் பேசத் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகிறோமே என்பதுதான். குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி இல்லாமல் போனால், வருங்கால சந்ததியினரின் கல்வி என்பதே நுனிப்புல் மேய்ந்த கதையாகிவிடுமே என்கிற அவரது ஆதங்கத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.
ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் எப்படித் தோன்றியது, எப்படி வளர்ந்தது என்பதை ஆய்வு செய்து "செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம்' என்கிற 4090 பக்கங்கள் கொண்ட தொகுப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார். தமிழின் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படும் இளங்குமரனாருடன் அரை மணி நேரம் செலவழிக்க எண்ணிய நாங்கள் இரண்டு மணி நேரம் உரையாடி மகிழ்ந்தோம்.
திருவள்ளுவர் தவச்சாலையில் தமிழ்த் தவம் செய்து கொண்டிருக்கும் இளங்குமரனாரின் உழைப்பு வீண்போய் விடாது. இவர்கள் செய்யும் தவம், தமிழைக் காப்பாற்றாமலா போகும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக