திங்கள், 18 பிப்ரவரி, 2013

கனகாம்பரத்தில்100 வகை!


கனகாம்பரத்தில்100 வகை!


கனகாம்பர ப் பூவில், 100 வகையான புதிய ரகங்களை உருவாக்கிய விவசாயி, வெங்கடபதி: நான், புதுச்சேரியின், கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவன். நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். தொடர்ந்து விவசாயம் செய்து வந்தாலும், லாபமின்றி பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், தற்கொலைக்கும் முயன்றிருக்கிறேன்.

கடந்த, 1989ம் ஆண்டு, நண்பர் ஒருவர், ஆறு கனகாம்பரம் பூச்செடிகளை கொடுத்தார். நானும், தோட்டத்தில் பதியன் போட்டு வளர்த்தேன். பின், ஒரு ஏக்கர் நிலத்தில், ஒரு லட்சம் கனகாம்பரச் செடிகளை பயிரிட்டேன்.
கனகாம்பர பூவுக்கு, வாசனை இல்லை எனினும், பெண்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், அதிக வருமானம் கிடைத்தது. "புதிய ரகங்களை, நாம் ஏன் உருவாக்கக் கூடாது' என்ற எண்ணத்தில், மகரந்த சேர்க்கை மூலம் முயற்சித்த போது, முழு திருப்தி கிடைக்கவில்லை. ஜெர்மன் நாட்டு விஞ்ஞானிகளின், கடிதத் தொடர்பு மூலம், அவர்களின் புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டேன்.

அணு கதிர் வீச்சு தேவைப்பட்டதால், கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் உதவியை நாடினேன். அவர்களும் நன்கு ஒத்துழைப்பு தந்தனர். காமா மற்றும் எக்ஸ்-ரே கதிர்களைப் பயன்படுத்தி, இதுவரை, 100 வகையான கனகாம்பர பூச்செடிகளை உருவாக்கி, அதற்கு காப்புரிமையும், ஒன்றன் பின் ஒன்றாக, வாங்கி வருகிறேன்.செடிக்கு செடி, 3 அடி இடைவெளியும், 4 அடி இடைவெளியில், வரிசையாகவும் நட்டால், ஆறாவது மாதத்திலிருந்து, பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். தை முதல், ஆனி வரையிலான காலத்தில், ஒரு செடியிலிருந்து, 15 கிலோ பூக்கள் கிடைக்கும். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பலன் தரும். வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக