ஞாயிறு, 13 ஜனவரி, 2013

முதல்வர் செயலலிதா பொங்கல் வாழ்த்து

முதல்வர் செயலலிதா பொங்கல் வாழ்த்து



தமிழக முதல்வர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்...
உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும்  மகிழ்ச்சி அடைகிறேன்.
சாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை  பொங்கல் பண்டிகை ஆகும்.
சுழன்றும்ஏர்ப்  பின்னது  உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
- எனும் வள்ளுவர் குறளிற்கேற்ப, உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் 
உழவுத் தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது.  இத்தகைய பெருமைக்குரிய உழவர்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் வருமானத்தை பெருக்கிடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் பல்வேறு சீரிய திட்டங்களை உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட தமிழக அரசு சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக மக்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.
இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்!
இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்!
என்று மனமார வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
- என்று வாழ்த்துக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக