திங்கள், 28 ஜனவரி, 2013

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வைகோ மனு ஏற்பு

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வைகோ மனு  ஏற்பு



விடுதலைப்  புலிகள் மீதான தடையி நீக்கக் கோரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்...
சென்னை உயர் நீதிமன்றத்தில்  இன்று (28.01.2013) விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த ரிட் மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) நீதியரசர் எலிப்பி தர்மாராவ், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில், வைகோ கூறியது:
“விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு 2012 மே 14 இல் பிறப்பித்த ஆணையை, மத்திய அரசு நியமித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயத்திற்கு அனுப்பி வைத்தது. அந்தத் தீர்ப்பாயத்தில் நான் நேரில் சென்று, புலிகள் மீதான தடையை இரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தேன். தீர்ப்பாயம் நடத்திய விசாரணைகளிலும் பங்கேற்றேன். ஆனால், அந்தத் தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆவணங்களின் பிரதிகள் எனக்கு வழங்கப்படவில்லை.
புலிகள் மீதான தடையை, உறுதி செய்து தீர்ப்பாயம் 2012 நவம்பர் 27 ஆம் தேதி பிறப்பித்த ஆணை நீதிக்கு எதிரானதும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும் உண்மைக்கு மாறான வாதங்களின் அடிப்படையிலும் தரப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராகவோ ஆபத்து ஏற்படும் விதமாகவோ செயல்பட்டால்தான் சட்டப்படி குற்றமாகும். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் மத்திய அரசு, விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டையும் தமிழ் ஈழத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக எள்ளவும் உண்மை இல்லாத, முழுக்க முழுக்க அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் மீது சுமத்தி இந்தத் தடையை நீடித்துள்ளது.
தமிழ் ஈழம் என்பது இலங்கைத் தீவில், ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு-கிழக்கு பகுதிகளைக் குறிப்பதாகும். இதற்கு ஆதாரமாக 1976 மே 14 இல் வட்டுக்கோட்டையில் தமிழர் அமைப்புகள் தந்தை செல்வா தலைமையில் கூடி நிறைவேற்றிய பிரகடனத்தை நான் தீர்ப்பாயத்தில் ஆவணமாக தாக்கல் செய்திருந்தேன். ஆனால், தீர்ப்பாய நீதிபதி அந்தப் பிரகடனத்தின் வாசகத்தையே புரிந்து கொள்ளாமல், இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள தமிழர்கள், தமிழ் ஈழத்தின் குடிமக்கள் ஆகலாம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஈழத்தின் பூர்வீகக் குடிமக்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள், குடி உரிமை பெறலாம் என்றுதான் அப்பிரகடனம் கூறுகிறது. அடிப்படையையே நீதிபதி மாற்றிச் சொல்கிறார். வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு விடுதலைப்புலிகள் அங்கீகரித்ததற்கு ஆதாரம் இல்லை என்று தீர்ப்பாய நீதிபதி கூறுகிறார். ஆனால், நான் பதிவு செய்த ஆவணங்களில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதி  மாவீரர் நாள் உரையின்போது, தேசியத் தலைவர் பிரபாகரன் உரையாற்றும் மேடையில், தமிழ் ஈழ வரைபடம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அது இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு பகுதிகளை மாத்திரமே காட்டுகிறது. இது தான் வட்டுக்கோட்டை பிரகடனத்திற்கு புலிகள் தந்துள்ள அங்கீகாரமாகும்.”
நீதியரசர் எலிப்பி தர்மாராவ்: (வைகோவைப் பார்த்து) விடுதலைப்புலிகள் என்று மூன்று பேர் இலங்கைக்கு ஆயுதம் கடந்த முயன்றதாக போடப்பட்ட வழக்கு குறித்து என்ன கூறுகிறீர்கள்?
இதற்கு வைகோ பதிலளிக்கையில்,
கடந்த முறை தடையை எதிர்த்து நான் வழக்கு தொடுத்தபோது, விடுதலைப்புலிகள் எவரும் இங்கு கைது செய்யப்படவில்லை. வழக்கு ஏதும் இல்லை என்று நான் கூறினேன். அதனால், புலிகள் தடையை நியாயப்படுத்துவதற்காக, தமிழ்நாடு ‘கியூ’ பிரிவு போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளனர். காவல்துறை பெற்றுள்ள ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் செல்லுபடி ஆகாது. இலங்கையில் இருந்து ஈழத் தமிழர் யார் வந்தாலும் இந்தத் தடையைக் காரணம் காட்டி அவர்களை அச்சுறுத்துவதும், பொய்வழக்கு போடுவதும், சிறப்பு முகாமில் அடைப்பதும் வழக்கமாகிவிட்டது. எனவே, தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்து, புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுகிறேன்.
ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் மீதான தடையை எதிர்த்து, நான் தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தங்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற்று அதன் மீதான தீர்ப்பையும் எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றார்.
இதை அடுத்து நீதியரசர் எலிப்பி தர்மாராவ், வைகோவின் ரிட் மனுவை அனுமதித்ததோடு, நான்கு வார காலத்திற்குள் அரசு தரப்பு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
- இவ்வாறு மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக